போராட்டத்தில் ஆண் காவலரின் சட்டை காலரை இழுத்த முன்னாள் மத்திய பெண் மந்திரி
|ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை செய்வதற்கு எதிரான போராட்டத்தில் ஆண் காவலரின் சட்டை காலரை முன்னாள் மத்திய மந்திரியான ரேணுகா சவுத்ரி பிடித்து இழுத்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த 3 தினங்களாக தீவிர விசாரணை நடத்தினர்.
மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லி உட்பட நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டங்களுக்கு தேவையான அனுமதியை பெறவில்லை என்று டெல்லி போலீஸ் தரப்பு குற்றம் சாட்டியது. காங்கிரசாரின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி அமலாக்க துறை அலுவலக பகுதியை சுற்றி சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிரப்பு தெரிவித்து, தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் போராட்டங்கள் நடந்தன.
இதில், தெலுங்கானாவில் நடந்த போராட்டத்தில் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான ரேணுகா சவுத்ரி, தன்னை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, ஆண் காவலர் ஒருவரது சட்டை காலரை பிடித்து இழுத்துள்ளார். அந்த போலீசாருடன் சவுத்ரி வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். அதனை மற்ற பெண் காவலர்கள் தடுத்தனர். பின்னர் அவரை அந்த பகுதியில் இருந்து பெண் காவலர்கள் அழைத்து சென்றனர். அவரை வேனில் ஏற்றி சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.