கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்ப்பு
|கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி,
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.50 அதிகரித்து உள்ளது. மே மாதத்தில் இருந்து 3-வது முறையாக அதிகரித்து இருக்கும் இந்த விலை உயர்வு, பொதுமக்களை வெகுவாக பாதித்து உள்ளது.
இந்த விலை உயர்வு மக்கள் விரோத நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
அந்தவகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் தளத்தில், 'தானியங்கள், மாவு, தயிர், பனீர் போன்றவறுக்கு 5 சதவீத கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி) விதித்து விட்டு, தேசிய செயற்குழு கூட்டத்தில் ஏழைகளின் வளர்ச்சி பற்றி பா.ஜனதா பேசுகிறது. தற்போது கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதுகை உடைத்து விட்டது' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதைப்போல கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தி தொடர்பாளர் ராகிணி நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் நாட்டை ஏமாற்றி வருவதுதான் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை. சீனாவுக்கு எதிராக சிவந்த கண்ணை காட்டுவேன என ஒருமுறை கூறியிருந்த பிரதமர் மோடி, இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராக எப்போது சிவந்த கண்ணை காட்டுவார். நாடு காத்திருக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் சர்வதேச சந்தையில் இருந்து அதிக விலை கொடுத்து அத்தியாவசிய எரிபொருட்களை வாங்கி, நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் கொடுத்தோம். ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் அனைத்து எரிபொருளும் மலிவாக கிடைத்தபோதும், நாட்டு மக்களுக்கு அதிக விலைக்கே விற்கப்படுகிறது.
அரசின் உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு பெற்ற ஏழைகள் எப்படி கியாஸ் சிலிண்டர்களை பெற முடியும். 2021-22-ம் ஆண்டில் 3.59 கோடி வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர்களை மீண்டும் நிரப்ப முடியவில்லை என ஊடக செய்திகள் கூறுகின்றன.
நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டிக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்.
அது மட்டுமின்றி விலைவாசிக்கு எதிரான மக்களின் குமுறலை வீதிகளில் இருந்து நாடாளுமன்றத்துக்கு எடுத்துச்செல்லும்.
இவ்வாறு ராகிணி நாயக் கூறினார்.
மகிளா காங்கிரஸ் தனது டுவிட்டர் தளத்தில், 'கியாஸ் சிலிண்டருக்கு மேலும் ரூ.50 விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது மராட்டிய அரசை கவிழ்ப்பதற்கு ஆன செலவா?' என கிண்டல் கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் தளத்தில், 'மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் இரக்கமற்றது. பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பதன் மூலம் வளங்களை உயர்த்துங்கள். ஏழைகளின் வாழ்வை அழித்து அல்ல' என சாடியுள்ளார்.