கங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவை நீக்கிய காங்கிரஸ் நிர்வாகி
|தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியான கங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவை காங்கிரஸ் நிர்வாகி நீக்கினார்.
சிம்லா,
நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக அவதூறு கருத்து ஒன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டின் எக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்தது. இது இரு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கிய சுப்ரியா, அது குறித்து விளக்கம் ஒன்றையும் அளித்து உள்ளார்.
அவர் கூறுகையில, 'எனது சமூக வலைத்தள கணக்குகளை பலரும் பயன்படுத்துகின்றனர். அதில் யாரோ மர்ம நபர்தான் மிகவும் தரக்குறைவான இந்த பதிவை போட்டுள்ளார். அது குறித்து அறிந்தவுடனே அதை நான் நீக்கிவிட்டேன்' என குறிப்பிட்டு இருந்தார்.
எந்த ஒரு பெண்ணுக்கு எதிராகவும் தனிப்பட்ட முறையில் கருத்துகளை தெரிவிக்கமாட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ள சுப்ரியா, இந்த பதிவை போட்டவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.