< Back
தேசிய செய்திகள்
ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்கள் ரத்து - காங்கிரஸ் கடும் தாக்கு

Image Courtesy: PTI

தேசிய செய்திகள்

ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்கள் ரத்து - காங்கிரஸ் கடும் தாக்கு

தினத்தந்தி
|
29 May 2022 6:28 AM IST

ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பணி நியமனங்களும், நம்பிக்கையும் முடிவுக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.

புதுடெல்லி,

ரெயில்வே துறையில் பாதுகாப்பு முக்கியத்துவம் இல்லாத 50 சதவீத பணியிடங்களை ரத்து செய்துவிடுமாறு 17 மண்டல ரெயில்வே நிர்வாகங்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரெயில்வே உற்பத்தி பிரிவுகள், சக்கர என்ஜின் தொழிற்சாலைகள், ரெயில்பெட்டி தொழிற்சாலைகளிலும் இந்த பணியிட வெட்டு செய்யப்படுகிறது.

பாதுகாப்பு முக்கியத்துவம் இல்லாத பிரிவில் மொத்த பணியிடங்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 825 ஆகும். இவற்றில் 91 ஆயிரத்து 649 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ரெயில்வேயில் மொத்தம் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்வது விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களில் புதிய நியமனங்கள் இருக்காது.

இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், "புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை. ஆனால் இருக்கிற வேலைகளை பறிக்கிற திறன் நிச்சயமாக இருக்கிறது. உங்கள் அராஜக அதிகாரத்தை இளைஞர்கள் உடைத்தெறிவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களது எதிர்காலத்தை அழிப்பதற்கு இந்த அரசு பெரும் இழப்புகளை சந்திக்கும்" என கூறி உள்ளார்.

இதையொட்டி காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், "வேலையில்லா திண்டாட்டம் 45 வருட சாதனையை முறியடித்துள்ளது. கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு நம்பிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது ரெயில்வேயில் 50 சதவீத வேலைவாய்ப்புகள் என்றைக்கும் இல்லாமல் போய் விட்டன. 91 ஆயிரத்து 629 பணியிடங்களில் இனி ஒரு போதும் நியமனங்கள் கிடையாது" என தெரிவித்துள்ளார்.

மேலும், "கிராமம் முதல் நகரம் வரை, ரெயில்வேயிலும், ராணுவத்திலும் வேலை கிடைப்பதற்காக இளைஞர்கள் இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடி அரசில் பணி நியமனங்களும், நம்பிக்கையும் முடிவுக்கு வந்து விட்டது" எனவும் அவர் சாடி உள்ளார்.

மேலும் செய்திகள்