'காங்கிரஸ் கட்சி ஓடுவதை நிறுத்திவிட்டு விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்' - அனுராக் தாக்கூர்
|காங்கிரஸ் கட்சி விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உரை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முன்பாக நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஓடுவதை நிறுத்திவிட்டு விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"நாடாளுமன்றத்தில் விவாரதம் நடத்துவதற்காக மக்கள் எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அமளியில் ஈடுபடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியிடம் 99 இடங்கள் மட்டுமே உள்ளன. ஒட்டுமொத்த எதிர்க்கட்சி கூட்டணியை சேர்த்தாலும், பா.ஜ.க.விடம் அதை விட அதிகமான இடங்கள் உள்ளன. அப்படி இருக்கும்போது எதற்காக எதிர்க்கட்சிகள் ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்கள்? 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தலைவர் கிடைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஓடுவதை நிறுத்திவிட்டு விவாதத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்."
இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.