< Back
தேசிய செய்திகள்
பிரதமருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும் - பா.ஜ.க.
தேசிய செய்திகள்

'பிரதமருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும்' - பா.ஜ.க.

தினத்தந்தி
|
18 July 2024 12:04 PM GMT

பிரதமருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது கடந்த 13-ந்தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வெறுப்பு பேச்சுகள் வன்முறையை தூண்டக்கூடியவை என்றும், பிரதமருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"வன்முறை, கொலை போன்ற வார்த்தைகளை குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக சில அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் படுகொலை மற்றும் டிரம்ப் மீதான சமீபத்திய தாக்குதல் ஆகியவற்றின் மூலம் எதிர்மறையான சூழ்நிலையின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

பிரதமருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தவிர்க்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகளில் மரணம், புதைகுழி தோண்டுதல் போன்ற வன்முறை வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் என்பது வேறு, வன்முறையை தூண்டுவது என்பது வேறு."

இவ்வாறு சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்