காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட தரமாட்டேன் - மம்தா பானர்ஜி திட்டவட்டம்
|தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தநிலையில் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை முன்னிட்டு அவர் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.
சோப்ரா நகரில் யாத்திரையை மம்தா பானர்ஜி நேற்று மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று மால்டா பகுதியில் பாத யாத்திரையாக சென்றார். திரிணாமுல் நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்-மந்திரியை உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுக முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக முழக்கமிட்டு ஏராளமான தொண்டர்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர்.
பாத யாத்திரை தொடங்கும் முன் அவர் பேசியதாவது:-
தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது. பா.ஜ.க.வை வீழ்த்தும் வலிமையுள்ள கட்சி உள்ளது என்றால் அது திரிணாமுல் காங்கிரஸ்தான்.
மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளிலும் காங்கிரசை வெற்றி பெறச்செய்ய தயாராக இருந்தேன். கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என கேட்கிறார்கள். காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்க மாட்டேன். தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எங்கள் முடிவில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் இல்லாமல் காங்கிரஸ் வெற்றிபெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.