தேசவிரோத செயல்களில் பா.ஜ.க. ஈடுபடுகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு
|தேச விரோத செயல்களில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில், கட்சியின் செய்திதொடர்பாளர் பவன் கெரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த வாரத்தில் நடந்த 2 சம்பவங்கள் பா.ஜ.க.வின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தி உள்ளன. முதலில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதில் குற்றம்சாட்டப்படுகிறவர்களில் ஒருவர் பா.ஜ.க. தொண்டர் என தெரிய வந்துள்ளது.
அடுத்து காஷ்மீரில் பிடிபட்டுள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி, பா.ஜ.க. நிர்வாகி என தெரிய வந்துள்ளது. அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அவர் அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்தவும் சதித்திட்டம் தீட்டி உள்ளார்.
பா.ஜ.க. தொடர்பு அம்பலம்
இந்தியர்களுக்கு தேசியவாதத்தை போதிக்கிற வாய்ப்பை பா.ஜ.க. இழந்து விட்டது. அதன் உறுப்பினர்களும், நிர்வாகிகளும் வன்முறையான தேச விரோத செயல்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
நுபுர் சர்மா, ரியாஸ் அட்டாரி என இருவருக்கு எந்த வகையான சித்தாந்தம் இருக்கிறது? தலீப் உசேன் போன்ற பயங்கரவாதிகளுக்கு இடம் அளிக்கிறார்களா? நாட்டைக் காப்பதற்காக நாங்கள் பா.ஜ.க.வை அம்பலப்படுத்துவோம். அவர்களுக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாகி உள்ளது.
பா.ஜ.க.வின் போலி தேசியவாதத்தை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.