< Back
தேசிய செய்திகள்
நான் காங்கிரஸ் தலைவரானால் காரியக்கமிட்டிக்கு தேர்தல் நடத்துவேன்- சசி தரூர்
தேசிய செய்திகள்

நான் காங்கிரஸ் தலைவரானால் காரியக்கமிட்டிக்கு தேர்தல் நடத்துவேன்- சசி தரூர்

தினத்தந்தி
|
12 Oct 2022 11:07 PM IST

நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வந்தால், காரியக்கமிட்டிக்கு தேர்தல் நடத்துவனே் என்று சசி தரூர் கூறினார்.

உண்மையிலேயே அதிகாரம்...

காங்கிரஸ் கட்சிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வரும் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேயும், முன்னாள் மத்திய மந்திரியும் கேரளாவை சேர்ந்தவருமான சசி தரூரும் நேரடி போட்டியில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் சசி தரூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். கட்சியின் அடித்தட்டு நிர்வாகிகளுக்கு உண்மையிலேயே அதிகாரம் வழங்க வேண்டும்.

நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், உதய்பூர் சிந்தனை அமர்வில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை அப்படியே முழுமையாய் செயல்படுத்துவேன்.

காரியக்கமிட்டிக்கு தேர்தல்...

கட்சியில் உள்கட்சி ஜனநாயகத்தை இன்னும் பரப்புவதற்கு ஏற்ற வகையில் காங்கிரஸ் காரியக்கமிட்டிக்கு தேர்தல் நடத்துவேன். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய சாசனத்தை முழுமையாக அமல்படுத்துவேன். 25 ஆண்டுகளாக செயலற்றுப்போன கட்சியின் ஆட்சிமன்றக்குழுவுக்கு புத்துயிரூட்டுவேன்.

காங்கிரஸ் கட்சி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள், பூத் காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உண்மையான அதிகாரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்.

22 ஆண்டுகளாக பங்களிப்பு இல்லை....

பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கு 22 ஆண்டுகளாக கட்சியில் எந்த பங்களிப்பும் இல்லை. ஆனால் 17-ந் தேதி நடக்கிற தேர்தலில் ஓட்டுரிமை மட்டும் உண்டு.

கட்சி விவகாரங்களிலும் ஆட்சி விவகாரங்களிலும் பா.ஜ.க.வின் அதிகார மயமாக்கலுக்கு காங்கிரஸ் நம்பகமான மாற்றை வழங்க வேண்டும்.

கட்சியில் சாதாரண தொண்டர்களிடம் இருந்து வருகிற ஆதரவு மகத்தான அளவில் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. பலர் எனது செய்தியை தங்களுடைய சொந்த வட்டாரங்களில் பரப்புகிறார்கள். எனது பிரசாரத்துக்கு ஊக்கத்துடன் ஆதரவு தருகிறார்கள்.

நான் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்துக்கான வேட்பாளர் ஆவேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் கட்சி தற்போது செயல்படுகிற விதத்தை மாற்றிக்காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்