< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவா? சசிதரூரா? - ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவா? சசிதரூரா? - ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்

தினத்தந்தி
|
19 Oct 2022 10:34 AM IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆகிறார்.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். ஓட்டு பதிவு முடிவடைந்ததும் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு வாக்கு பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஓட்டுப்பெட்டிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டன.

இந்தநிலையில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தலைவர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்