< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் வன்முறை: ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன், காங்.தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு சந்திப்பு..!
தேசிய செய்திகள்

மணிப்பூர் வன்முறை: ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன், காங்.தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு சந்திப்பு..!

தினத்தந்தி
|
30 May 2023 12:07 PM IST

காங்.தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த 3-ந்தேதி முதல் நடந்து வரும் கலவரத்தில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் இணைந்து வீடுகளுக்கு தீ வைப்பு, பொதுமக்கள் மீது தாக்குதல் போன்ற சதி செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த, பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் அதிரடி வேட்டையை தொடங்கினர். நாள் முழுவதும் நடந்த தாக்குதல்களில் சுமார் 40 பயங்கரவாதிகள் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடியால் நேற்று மாநிலத்தில் அமைதி திரும்பியது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சி தலைவர்கள் குழுவுடன் இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினர். அப்போது மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஜனாதிபதியிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளித்தனர். மேலும் வன்முறை காரணமாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "மணிப்பூரின் நிலைமை குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இன்று மனு ஒன்றை அளித்துள்ளோம். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைப்பது உட்பட 12 கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்