நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி: மல்லிகார்ஜூன் கார்கே
|வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ராய்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு தொடங்கியது. காரியக்கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம், கட்சித்தலைவர் கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் பிப்ரவரி 24-ந் தேதி (நேற்று) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான உத்தி வகுக்கப்படும், கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இன்று இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், ''கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி சிறந்த தலைமையை வழங்கியது. தீர்க்கமான தலைமைக்கான ஒரே மாற்றாக அது மட்டுமே இருக்க முடியும். அப்போது இருந்ததுபோல், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்புகிறது"என்றார்.