'தோல்வி உறுதியாகிவிட்டால் காங்கிரஸ் கட்சி தலித்துகளை களமிறக்கும்' - சிராக் பஸ்வான் விமர்சனம்
|தோல்வி உறுதியாகிவிட்டால் காங்கிரஸ் கட்சி தலித்துகளை களமிறக்கும் என சிராக் பஸ்வான் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த பதவிக்கு போட்டியிட பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா மற்றும் 'இந்தியா' கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி.யான கொடிக்குனில் சுரேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், தோல்வி உறுதியாகிவிட்டால் காங்கிரஸ் கட்சி தலித்துகளை களமிறக்கும் என மத்திய மந்திரியும், லோக் ஜன்சக்தி(ராம் விலாஸ்) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"2002-ம் ஆண்டு நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணி, தலித் தலைவர் சுஷில் குமார் ஷிண்டேவை வேட்பாளராக நிறுத்தியது.
2017-ம் ஆண்டில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி உறுதியாகி இருந்தபோது, தலித் சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் தலைவர் மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கூட்டணி அறிவித்தது.
தற்போது மக்களவை சபாநாயகர் தேர்தலில் தங்களுக்கு தேவையான ஆதரவு எண்ணிக்கை இல்லாத சூழலில், காங்கிரஸ் கட்சியின் முத்த தலித் தலைவர் கொடிக்குனில் சுரேஷை வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்தியுள்ளது. தலித் தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வெறும் அடையாள வேட்பாளர்கள் தானா?"
இவ்வாறு சிராக் பஸ்வான் பதிவிட்டுள்ளார்.