நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை வலுவாக எழுப்ப முடிவு; சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த ஆலோசனை
|இரு அவைகளிலும் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இரு அவைகளிலும் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவைக்குழு துணைத்தலைவர் பிரமோத் திவாரி, மக்களவை தணைத்தலைவர் கவுரவ் கோகாய், மாநிலங்களவை தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் பிரச்சினை, அக்னிவீர், நீட் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் உறுதியாக எழுப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தி அதிலும் பொது பிரச்சினைகளை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.