< Back
தேசிய செய்திகள்
மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம்- ஜே.பி.நட்டா
தேசிய செய்திகள்

மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம்- ஜே.பி.நட்டா

தினத்தந்தி
|
20 May 2022 12:54 AM IST

காங்கிரஸ் இப்போது அண்ணன்-தங்கை கட்சி ஆகிவிட்டது. மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம் என்று ஜே.பி.நட்டா கூறினார்.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

'ஜனநாயக ஆட்சிமுறைக்கு குடும்ப கட்சிகளால் அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கம் நடந்தது. அதில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.

அவர் பேசியதாவது:-

குடும்ப கட்சிகளில் ஒரு தனிநபரின் நலன்களுக்குத்தான் உயர் முன்னுரிமை அளிக்கப்படும். அங்கு எந்த சித்தாந்தமும் இருக்காது. அவை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஆகும்.

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால், அத்தகைய குடும்ப கட்சிகளில் பிறப்பின் அடிப்படையில் கட்சித்தலைமை தீர்மானிக்கப்படுகிறது. மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

ஆளுமை வழிபாடு

மாநில கட்சிகள் வளர்ந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம். அந்த கட்சி, தேசிய அரசியலில் உச்சத்தில் இருந்தபோது, மாநில உணர்வுகளுக்கு இடம் அளிக்காததால்தான் மாநில கட்சிகள் வளர்ந்தன.

ஆனால், பா.ஜனதா, வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் நம்பிக்கை வைத்துள்ளது. மத்திய அரசை வலிமையாக வைத்துக்கொண்டு மாநில உணர்வுகளுக்கு இடம் அளிக்கிறது.

மாநில கட்சிகள் வளர வளர, தனிநபரின் ஆளுமையை வழிபடுவது மிதமிஞ்சி வளர்ந்து விட்டது. சித்தாந்தம் ஒதுக்கப்பட்டு விட்டது.

இதில் மிகவும் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், காங்கிரஸ் தேசிய கட்சியாகவோ, இந்திய கட்சியாகவோ, ஜனநாயக கட்சியாகவோ ஆகவில்லை. 'அண்ணன்-தங்கை' கட்சி ஆகிவிட்டது.

பா.ஜனதாவில் மட்டும்தான் உள்கட்சி ஜனநாயகம் தழைத்தோங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்