< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பாரத் ஜோடோ நியாய யாத்திரை என பெயர் சூட்டிய காங்கிரஸ்
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என பெயர் சூட்டிய காங்கிரஸ்

தினத்தந்தி
|
4 Jan 2024 6:00 PM IST

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், வரும் 14-ந் தேதி தொடங்கும் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான ராகுல் காந்தியின் யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார். முன்னதாக இதற்கு 'பாரத் நியாய யாத்திரை' என்று பெயரிடப்பட்டிருந்தது.

மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும் என்றும் 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரையைப் போன்று, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இந்த யாத்திரையில் பங்கேற்க அனைத்து 'இந்தியா' கூட்டணி தலைவர்களையும் காங்கிரஸ் கட்சி அழைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், அதற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்