விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு தொழில் அதிபர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
|கோடீஸ்வரர்களின் ரூ.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டாலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பாட்னா,
பீகாரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது விவசாயிகளிடம் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
விவசாயிகளின் நிலத்தைக் காக்க வேண்டும் என்று எந்த அரசியல் தலைவர் பேசினாலும், அவர்கள் 24 மணி நேரமும் ஊடகங்களால் தாக்கப்படுவார்கள். இங்கு இந்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீறுகிறது. இந்த பிரச்சினையை உங்களுக்காக நாடாளுமன்றத்தில் என்னால் எழுப்ப முடியும். ஆனால் பிரதமர் மோடி எதாவது செய்வார் என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. வேண்டுமென்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், உங்களுக்காக இதைச் செய்வோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அனைத்து திசைகளிலிருந்தும் விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். உங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு அதானி போன்ற பெரிய தொழில் அதிபர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி 3 கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வர முயற்சித்தார், ஆனால் நாட்டின் அனைத்து விவசாயிகளும் அதற்கு எதிராக நின்றது பெருமைக்குரியது.
கோடீஸ்வரர்களின் ரூ.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டாலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. விவசாயிகள் வாங்கிய ரூ.72,000 கோடி வேளாண் கடன்களை ரத்து செய்தது காங்கிரஸ்தான். சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் எங்கள் அரசு இருந்தபோது, விவசாயிகளுக்கு சரியான விலையை (விளைபொருட்களுக்கு) வழங்கினோம். விவசாயிகளின் மனதில் உள்ள பயத்தை பீகார் அரசால் போக்க முடியவில்லை என்பதே உண்மை. அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.