ராகுல் காந்தி விமான தரையிறக்கம் குறித்து தவறான தகவல்: உ.பி., காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு
|ராகுல் காந்தி விமான தரையிறக்கம் குறித்து தவறான தகவல் தெரிவித்ததாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாரணாசி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கமலா நேரு ஆஸ்பத்திரியில் கடந்த 14-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக இருந்தது. இதற்காக கேரளாவின் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் வாரணாசி சென்று, பின்னர் அங்கிருந்து பிரயாக்ராஜ் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ராகுல் காந்தியின் விமானம் வாரணாசியில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் குற்றம் சாட்டினார்.
ஆனால் ராகுல் காந்தியின் விமானம் நேராக டெல்லி சென்று விட்டதாகவும், விமான நிறுவனம்தான் அவரது வாரணாசி தரையிறக்கத்தை ரத்து செய்ததாகவும் விமான நிலைய இயக்குனர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் விமான தரையிறக்கம் தொடர்பாக தவறான தகவல் அளித்ததாக அஜய் ராய் மீது புல்புர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வாரணாசி விமான நிலைய செயல் இயக்குனர் அஜய் பதக் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது உத்தரபிரதேச காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.