< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது; ராகுலுடன் சோனியாகாந்தியும் பங்கேற்றார்

தினத்தந்தி
|
6 Oct 2022 9:17 PM GMT

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு காங்கிரஸ் பாதயாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ராகுலுடன் சோனியா காந்தியும் பங்கேற்று நடந்து சென்றார்.

மண்டியா:

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு காங்கிரஸ் பாதயாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ராகுலுடன் சோனியா காந்தியும் பங்கேற்று நடந்து சென்றார்.

காங்கிரஸ் பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் ஒற்றுமைக்கான பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரையை ராகுல்காந்தி மேற்கொண்டார் இதையடுத்து கடந்த மாதம் 30-ந்தேதி கர்நாடகத்தில் அவர் இந்த பாதயாத்திரையை தொடங்கினார்.

அதாவது கேரளா-கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரு, மண்டியா ஆகிய பகுதிகளில் 4 நாட்கள் பாதயாத்திைர மேற்கொண்ட ராகுல்காந்தி கடந்த 3-ந்தேதி மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் பாதயாத்திரையை நிறைவு செய்தார். இதையடுத்து தசரா பண்டிகையை முன்னிட்டு பாதயாத்திரைக்கு 2 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது.

சோனியா காந்தி பங்கேற்பு

இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகத்துக்கு வந்தார். அவர் மைசூரு அருகே சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள கபினி சொகுசு விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் ராகுல்காந்தியும் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு காங்கிரசின் பாதயாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பெல்லாலே பகுதியில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் சோனியா காந்தியும் கலந்துகொண்டு சிறிது தூரம் நடந்து சென்றார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி, 2016-ம் ஆண்டுக்கு பிறகு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது அவர் ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரையில் நேற்று பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை ராகுல்காந்தி மிகவும் பக்குவமாக பார்த்து கொண்டார். சோனியா காந்தி அருகே யாரையும் செல்ல விடாமல் அவரை பாதுகாத்தார்.

12 நிமிடம் மட்டுமே...

சோனியாகாந்தி உற்சாகமாக நடைபயணம் மேற்கொண்டார். அவ்வப்போது ராகுல்காந்தி, தனது தாயிடம் சோர்வாக இருக்கிறதா என கேட்டப்படி இருந்தார். அதற்கு சோனியா காந்தியோ சோர்வாக இல்லை என கூறி நடந்தார்.

இருப்பினும் ராகுல்காந்தி, அவரை நீண்ட தூரம் நடக்க அனுமதிக்கவில்லை. உடல் நலம் கருதி பாதயாத்திரையில் நடந்து வர வேண்டாம் என்று கூறி அவரை ராகுல்காந்தி காரில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் இந்த பாதயாத்திரையில் சோனியா காந்தி 12 நிமிடங்கள் மட்டுமே பங்கேற்றார்.

உற்சாக வரவேற்பு

பாதயாத்திரையை உற்சாகமாக மேற்கொண்ட ராகுல்காந்தி, காலை 11 மணி அளவில் சவுடனஹள்ளி கேட் பகுதியில் சிறிது ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து தொடங்கினார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ராகுல்காந்தியுடன் சிறிது தூரம் நடந்து சென்றனர். சாலையோரம் நின்றப்படி ஏராளமானோர் ராகுல்காந்தியை செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். வெயிலின் தாக்கம் குறைந்திருந்ததால் ராகுல்காந்தி புத்துணர்ச்சியுடன் நடைபோட்டார்.

நேற்று இரவு 7 மணி அளவில் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா பிரம்மதேவரஹள்ளி கிராமத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் மதகேஒசூர் கேட் பகுதியில் பாதயாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, அரசு ஆயுர்வேத மருத்துவமனை எதிரே தங்கி ஓய்வெடுத்தார். கர்நாடகத்தில் 5-வது நாள் நடந்த இந்த பாதயாத்திைரயில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்

இன்னும் 6 மாதத்தில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு கர்நாடக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த பாதயாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்றது சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தில் மொத்தம் 21 நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரையில் பிரியங்கா காந்தியும் வரும் நாட்களில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சோனியா காந்தியின் 'ஷூ' கயிறை கட்டிய ராகுல்காந்தி

கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். 5-வது நாளான நேற்றைய பாதயாத்திரையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், ராகுல்காந்தியின் தாயுமான சோனியா காந்தி பங்கேற்றார். பாதயாத்திரையில் கலந்துகொண்ட சோனியா காந்தியை ராகுல்காந்தி மிகவும் பாதுகாப்பாக பார்த்துகொண்டார். மேலும் அவரது 'ஷூ' கயிறையும் ராகுல்காந்தி கட்டிவிட்டார். இதுதொடர்பாக படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ராகுல்காந்திக்கு பாராட்டும், ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்