தேர்தல் நடத்தை விதியை மீறிய விமான நிறுவனம்..?! ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
|விமான நிறுவனம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்
புதுடெல்லி,
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இம்மாநிலங்களில் அமலில் உள்ளது.
இந்த நிலையில் விமான நிறுவனம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்
இதுதொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' வலைதளத்தில், "கடந்த வாரம் நான் டெல்லியில் இருந்து மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் நகருக்கு இண்டிகோ விமானத்தில் சென்றுவிட்டு திரும்பினேன். இருவழிப் பயணத்திலும் அந்த விமான சிப்பந்திகள் குழு, விமானத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கமான, முக்கியமில்லாத ஒன்றுக்காக பிரதமர் மோடியை புகழ்ந்தது.
மேலும் மற்றொரு அறிவிப்பில், நடைபெறவிருக்கிற மாநில சட்டசபை தேர்தலில் பயணிகள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதில் தேர்தல் ஆணையம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது எல்லாமே தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். ஆனால் சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூருக்கு புதன்கிழமை (நேற்று) மற்றொரு விமானத்தில் சென்றேன். அந்த விமானத்தில் இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்னும் சில நிறுவனங்கள் மோடி அரசின் அழுத்தத்துக்கு உட்படாமல் இருப்பதும், சரியான நடைமுறையை பின்பற்றுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.