கட்சித் தலைவர் தேர்தல்; காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு 'கியூஆர்' கோடுடன் கூடிய அடையாள அட்டை
|காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு ‘கியூஆர்’ கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை அளிக்குமாறு காங்கிரஸ் தேர்தல் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பதவி ஏற்றார்.இந்தநிலையில், முழுநேர தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அக்டோபர் 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், இம்மாதம் 24-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை நடக்கிறது. இந்தநிலையில், காங்கிரசின் உட்கட்சி தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில், மாநில அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், திட்டமிட்டபடி, புதிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் தேர்தலை இம்மாதம் 16-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மதுசூதன் மிஸ்திரி உத்தரவிட்டார்.மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கும் 'கியூஆர்' கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை அளிக்குமாறு கூறினார்.இத்தேர்தலில் மொத்தம் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் ஓட்டுப்போட உள்ளனர். இவர்களின் பெயர்கள் 20-ந் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு, பட்டியல் வெளியாகும்.
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி இன்னும் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. அதனால், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் பெயர் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. அவர் சோனியாகாந்தி குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றவர். ஆனால், சோனியாகாந்தி குடும்பத்தினர் அல்லாத வெளிநபர் நிறுத்தப்பட்டால், தானும் போட்டியிட போவதாக சசிதரூர் எம்.பி. அறிவித்துள்ளார். வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அவர் கோரியுள்ளார். வேட்புமனு ஏற்கப்பட்டவுடன், வாக்காளர் பட்டியல் நகல் அளிக்கப்படும் என்று தேர்தல் பிரிவு உறுதி அளித்துள்ளது.