பாஜக-பிஆர்எஸ்-ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது - ராகுல் காந்தி
|பாஜக-பிஆர்எஸ்-ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரங்காரெட்டி (தெலுங்கானா),
ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தெலுங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளநிலையில், இன்று தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முன்னாள் தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய காங்கிரசின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, "ED அல்லது CBI என ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவர் மீதும் மத்திய அமைப்புகளால் வழக்குகள் உள்ளன. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியை பிரதமர் நரேந்திர மோடி தனது "சொந்த மக்கள்" என்று கருதுவதால் அவர்களுக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.
பிஆர்எஸ், பிஜேபி மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகியவை இணைந்து, தங்களை வெவ்வேறு கட்சிகள் என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். பாஜக-பிஆர்எஸ்-ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடி வருகிறது" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.