எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்து அவதூறு போஸ்டர்: கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி-பரபரப்பு
|எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்து அவதூறு போஸ்டர் குறித்து கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
தர்ணா போராட்டம்
கர்நாடக மேல்-சபை நேற்று காலை கூடியது. சபை தொடங்கியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், 'பே-சி.எம்.' சுவரொட்டி விவகாரத்தில் அரசு ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்த அவதூறு போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபை தலைவர் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து சபை மீண்டும் கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதால் சபையில் கடும் அமளி உண்டானது. அப்போது ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் போஜேகவுடா பேசுகையில், "முதல்-மந்திரியை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியது சரியல்ல. அதே போல் எதிர்க்கட்சி தலைவர் குறித்த சுவரொட்டியும் ஏற்க முடியாது" என்றார்.
40 சதவீத கமிஷன்
அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டத்துறை மந்திரி மாதுசாமி, "இத்தகைய அவதூறு சுவரொட்டி விவகாரத்தை யாரும் நியாயப்படுத்த கூடாது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே நிலையில் உள்ளன. அரசியல்வாதிகள் குறித்து ஏற்கனவே மக்களிடையே நல்ல எண்ணம் கிடையாது. அதனால் நம்மிடையே பிரச்சினைகள் இருப்பது வேறு. ஆனால் பொதுவெளியில் நாம் விமர்சனத்திற்கு ஆளாகக்கூடாது" என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "நாங்கள் எல்லா விதமான விவாத்திற்கும் தயாராக உள்ளோம். இந்த விவகாரம் குறித்து அரை மணி நேரம் விவாதத்திற்கு வழங்கலாம்" என்றார். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், "40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கலாம் என்று முதல்-மந்திரியே கூறியுள்ளார். அதனால் நாங்கள் அதுகுறித்து நோட்டீசு வழங்குகிறோம். அதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
பரபரப்பான சூழல்
பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் இருக்கையில் இருந்து எழுந்து காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து கூறி கோஷங்களை எழுப்பினர். இரு கட்சிகளும் கோஷங்களை எழுப்பியதால் சபையில் கடும் அமளி உண்டானது. இதற்கிடையே காங்கிரஸ் உறுப்பினர்கள் சபை தலைவரின் இருக்கைக்கு அருகே வந்து ஆவேசமாக பேசினர். இதையடுத்து மார்ஷல்கள் சபை தலைவர் இருக்கைக்கு அருகில் வந்து பாதுகாப்புக்கு நின்றனர். இதனால் சபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கூச்சல்-குழப்பம் ஏற்ட்டதை அடுத்து சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.