< Back
தேசிய செய்திகள்
காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரை மீண்டும் நாளை தொடரும்
தேசிய செய்திகள்

காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரை மீண்டும் நாளை தொடரும்

தினத்தந்தி
|
15 Sept 2022 7:17 AM IST

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று ஒரு நாள் இடைவேளை விட்டு நாளை கேரளாவின் கொல்லம் நகரில் இருந்து மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,


காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி தலைமையில் பாதயாத்திரை செல்கின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ஒற்றுமை பாதயாத்திரை என்ற பெயரில் மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்திற்கு நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் செல்கிறார்கள்.

தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். அன்று முதல் 10-ந்தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 54 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். அதன்பின்பு 11-ந்தேதி முதல் அவர் கேரள மாநிலத்தில் நடைபயணம் தொடங்கினார்.

இந்நிலையில், காங்கிரசாரின் பாதயாத்திரை இன்று ஒரு நாள் இடைவேளை விட்டு நாளை மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில், திருவனந்தபுரம் நகரின் நவயிக்குளம் என்ற பகுதியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை இதுவரை மொத்தம் 7 நாட்கள் நடந்துள்ளது. 7-வது நாளான நேற்று ராகுல் காந்தி கொல்லம் மாவட்டத்தின் சாத்தனூர் பகுதியில் மாணவர்களுடன் உரையாடினார்.

இதுபற்றி ஜெய்ராம் ரமேஷ், எங்களது ஒரு வார கால பாதயாத்திரை முடிந்துள்ளது. இந்த பயண தொலைவில், எங்களது ஈடுபாடு வளர்ந்து உள்ளது. இலக்குகள் தெளிவாகியுள்ளன. எங்களது குடும்பம் பெரிய அளவில் வளர்ந்து உள்ளது. இதுவே உண்மையின் ஆற்றல். ஒற்றுமையின் ஆற்றல் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்