மோதலை உருவாக்கும் பணியில் காங்கிரஸ்; வளர்ச்சி பணிகளில் பிரதமர் மோடி: மத்திய மந்திரி அமித்ஷா
|காங்கிரஸ் கட்சி மக்களிடையே மோதல்களை உருவாக்குகிறது, ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
சிம்லா,
இமாசல பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சிர்மார் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசும்போது, பழங்குடியின அந்தஸ்து கோரிய ஹதி சமூகத்தினரின் 55 ஆண்டுகால போராட்டத்திற்கு பிரதமர் மோடி முடிவு ஏற்படுத்தி உள்ளார். அவர்களின் வலியை பிரதமர் உணர்ந்திருக்கிறார். இமாசல பிரதேச மக்கள் மீது அவர் பற்று கொண்டு உள்ளார்.
அதனாலேயே, அவர் பெருமையுடன் இமாசல பிரதேசம் என்னுடையது என கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பணியானது மக்களிடையே மோதல்களை உருவாக்கி, நெருப்பு பற்ற வைப்பது ஆகும். ஆனால் பிரதமர் மோடி, வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறார் என அமித்ஷா பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, இமாசல பிரதேசத்தில் 3-ல் இரு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். வாரிசு அரசியலில் இருந்து நாடு விடுபட வேண்டாமா? அரசியலில் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு முடிவு கட்டும் வேலையை பிரதமர் மோடி செய்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியானது, ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளது. ஆனால், அவர்களால் நம்முடைய பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க முடியவில்லை என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.