உறுப்பினரை ஒருமையில் பேசிய மந்திரியை கண்டித்து கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி; சபை ஒத்திவைக்கப்பட்டது
|காங்கிரஸ் உறுப்பினரை மந்திரி ஒருமையில் பேசியதை கண்டித்து சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளியில் உண்டானது.
பெங்களூரு:
பஸ் வசதிகள்
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் நேற்று காலை பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் சித்துசவதி, போக்குவரத்துத்துறை தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதாவது கிராமப்புறங்களில் போதிய பஸ் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். அப்போது காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள், இது ஒரு தொகுதியில் நிலவும் பிரச்சினை கிடையாது என்றும், மாநிலம் முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாகவும் கூறினர்.
தர்ணா போராட்டம்
இந்த கேள்விக்கு போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு பதிலளித்தார். இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் காகேரி விடுத்த வேண்டுகோளை ஏற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்பினர்.
அதைத்தொடர்ந்து உறுப்பினர் தொட்டனகவுடா பட்டீல் கேள்வி கேட்டார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ரங்கநாத் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினார். இதனால் கோபம் அடைந்த சட்டத்துறை மந்திரி மாதுசாமி, அவரை நோக்கி ஒருமையில் பேசி வெளியே போ என்று கூறினார். மந்திரியின் இந்த கருத்தை கண்டித்து காங்கிரசின் இன்னொரு உறுப்பினர் மஞ்சுநாத் சபாநாயகரின் இருக்கையின் முன்பகுதிக்கு வந்து ரங்கநாத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
உறுப்பினர்களின் உரிமை
இதனால் கோபம் அடைந்த நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், மஞ்சுநாத்தை நோக்கி ஒருமையில் பேசி அவரை சபையில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு கேட்டு கொண்டார்.
அப்போது சித்தராமையா குறுக்கிட்டு, "குண்டர்களை போல் பேசுவது, அவ்வாறு நடந்து கொள்வது சரியா?. தர்ணா நடத்துவது உறுப்பினர்களின் உரிமை. உறுப்பினர்களை மிரட்டுவதை ஏற்க முடியாது. உறுப்பினர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை அரசு வழங்க வேண்டும். மந்திரியின் பதிலால் திருப்தி இல்லை என்றால் உறுப்பினர்கள் தர்ணா நடத்துவார்கள். இது விதிமுறைகளில் உள்ளது. ஆனால் அவர்களை வெளியே செல்லுமாறு கூறுவது சரியா?. அவர்கள் உங்களின் வீட்டிற்கு வந்துள்ளார்களா?. உறுப்பினர்களை மதித்து பேச வேண்டும்" என்றார்.
இதையடுத்து மந்திரிகள் மாதுசாமி, கோவிந்த் கார்ஜோள் ஆகியோரின் கருத்தை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி குழந்தைகளுக்கு பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியாத இந்த அரசு ஊழல்களை மூடிமறைப்பதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
கூச்சல்-குழப்பம்
பதிலுக்கு ஆளும் பா.ஜனதா உறுப்பினர்களும் காங்கிரசுக்கு எதிராக பேசினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. ஒரு கட்டத்தில் கடும் அமளி உண்டானது. இதையடுத்து சபாநாயகா் சபையை சிறிது நேரம் ஒத்திவைத்தார். சபை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
அப்போது மந்திரி மாதுசாமி காங்கிரஸ் உறுப்பினா்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. அதைத்தொடர்ந்து மீண்டும் பேசிய சித்தராமையா, "சமீபத்தில் நான் வருணா தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது அங்கு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பஸ் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்தேன். எல்லா பகுதிகளிலும் இந்த பிரச்சினை உள்ளது. மந்திரியாக இருப்பவர் பொறுமையாக இருக்க வேண்டும். உறுப்பினரை வெளியே போ என்று கூறுவது நியாயமா?. உறுப்பினர்களை மிரட்டுவது எந்த கலாசாரம்?. மந்திரி கோவிந்த் கார்ஜோள் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை தர்ணாவை கைவிட மாட்டோம்" என்றார். அதைத்தொடர்ந்து சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
பசவராஜ் பொம்மை
சிறிது நேரத்திற்கு பிறகு சபை கூடியபோதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. அப்போது பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "சம்பந்தப்பட்ட மந்திரி தனது பதிலை கூறியுள்ளார். அதன் பிறகும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா நடத்துவது சரியல்ல. ஆளுங்கட்சிக்கு எந்த அளவுக்கு பொறுப்பு உள்ளதோ அதே அளவு பொறுப்பு எதிர்க்கட்சிக்கும் உள்ளது. இதை கவுரவ பிரச்சினையாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. திட்டமிட்டு உறுப்பினரை அவமதிக்கும் நோக்கத்தில் கோவிந்த் கார்ஜோள் பேசவில்லை. பேசும்போது வாய் தவறி பேசி இருக்கலாம்" என்றார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சித்தராமையா, "கோவிந்த் கார்ஜோள் மூத்த மந்திரி. உறுப்பினர் ரங்கநாத் தனது தொகுதி பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் கோவிந்த் கார்ஜோள் அவரை மரியாதை குறைவாக பேசியுள்ளார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை சபையை நடத்த விட மாட்டோம்" என்றார்.
ஒத்திவைப்பு
சபையில் தொடர்ந்து கூச்சல்-குழப்பம் நிலவியதால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு சபை மீண்டும் நடந்தது.