'காங்கிரஸ் அரசியலமைப்பை கொலை செய்துவிட்டு புத்தகத்தை கையில் வைத்துள்ளது' - மத்திய மந்திரி விமர்சனம்
|காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை கொலை செய்துவிட்டு புத்தகத்தை கையில் வைத்துள்ளது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25-ந்தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதனை இந்தியாவின் கருப்பு நாள் என பல்வேறு அரசியல் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை கொலை செய்துவிட்டு, அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துள்ளது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அரசியலமைப்பு எவ்வாறு கொலை செய்யப்பட்டது என்பதை நம்மால் மறக்க முடியாது. காங்கிரஸ் கட்சி செய்ததை இனி யாரும் மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். இந்த நாட்டிற்கு டாக்டர் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை கொலை செய்துவிட்டு, தற்போது அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறது. 1975-ல் அப்பாவி மக்கள் மீது காங்கிரஸ் கட்சி ஏவிய அடக்குமுறைகள், பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரத்தை முடக்கியது உள்ளிட்ட நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசியல் சாசன படுகொலை தினத்தை கடைபிடிக்க அரசு முடிவு செய்துள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.