< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி- அஜய் மக்கான்
தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்.. பா.ஜ.க. தலைவர்கள் மீது போலீசில் புகார் அளித்தது காங்.

தினத்தந்தி
|
18 Sept 2024 1:38 PM IST

புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அஜய் மக்கான் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி:

இந்திய அரசியல் களத்தில் சமீப காலமாக விமர்சனங்கள் எல்லைமீறி போகின்றன. குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். சிலர் மிரட்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் பேசுகின்றனர்.

சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் தாக்கி அவர் பேசியது சர்ச்சையானது. இதற்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இவ்வாறு விமர்சனம் செய்தவர்களில் ராகுல் காந்திக்கு எதிரான வெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் தொனியிலும் பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான தர்வீந்தர் சிங் மர்வா, ரகுராஜ் சிங், ரன்வீத் பிட்டு (மத்திய ரெயில்வே இணை மந்திரி) மற்றும் சிவ சேனா கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் ஆகியோர் மீது டெல்லி தவுலக் ரோடு காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் இந்த புகாரை அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவேண்டும் என அஜய் மக்கான் கூறி உள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை பயங்கரவாதி என்று அழைப்பது, அவர் மீது பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தனிப்பட்ட வெறுப்பையே காட்டுகிறது. மக்களிடையே கலவரத்தைத் தூண்டி அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு பேசுகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசும் அளவிற்கு இந்திய அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது" என்றார்.

ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுவோருக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று சிவ சேனா எம்.எல்.ஏ. கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்