தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிக்கக்கூடாது.. சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு
|சுப்ரீம் கோர்ட்டு முன்னர் அளித்த உத்தரவின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்படி உத்தரவிடவேண்டும் என்று மனுதாரர் ஜெயா தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, மத்திய சட்ட மந்திரி தலைமையில் 2 மத்திய செயலாளர்களை உள்ளடக்கிய தேடுதல் குழு, புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க, ஒரு பதவிக்கு 5 பேர் என்ற அடிப்படையில் பெயர்களை தேர்வு செய்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழுவில் மத்திய மந்திரி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என 3 பேர் இடம்பெற்றுள்ளனர். தேடுதல் குழு அனுப்பி வைக்கும் பரிந்துரை பட்டியலில் இருந்து ஒருவரை இந்த தேர்வுக்குழு தேர்வு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரையை ஏற்று அவரை தேர்தல் அதிகாரியாக ஜனாதிபதி நியமிப்பார்.
மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது 2 தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக இருப்பதால், ஒவ்வொரு பதவிக்கும் தலா 5 பேரின் பெயர்களை சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான தேடுதல் குழு பரிந்துரை செய்யும். இந்த இரண்டு பட்டியலில் இருந்தும் தலா ஒருவரை பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்து பரிந்துரை செய்ய உள்ளது. தேர்வுக்குழு வரும் 15ம் தேதி கூடி தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், 2 தேர்தல் ஆணையர்களை அரசாங்கம் நியமிப்பதற்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரை செய்யும் நபர்களை தேர்தல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்த உத்தரவை ஜெயா தாகூர் தனது மனுவில் மேற்கோள் காட்டியுள்ளார். அந்த உத்தரவின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்படி உத்தரவிடவேண்டும் என்றும் ஜெயா தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.