பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
|பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
பெங்களூரு
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி பாட்னாவில் இந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவரான தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18-ந்தேதிகளில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் திட்டமிட்டபடி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 6 மணியளவில் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ்வெஸ்ட் என்டு நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 12 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் அதே ஓட்டலில் தொடங்கியது. இதில் 24 கட்சிகளின் தலைவர்கள், சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெகபூபா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2-வது நாளாக சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
அனைத்து தலைவர்களையும் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவகுமார்,ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் 7 மாநில முதல்- அமைச்சர்கள், 4 முன்னாள் முதல் மந்திரிகள் பல மாநில கட்சி தலைவர்கள் என 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது கூறியதாவது:
மாநில அளவில் எங்களுக்குள் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை நாங்கள் அறிவோம். இந்த வேறுபாடுகள் கருத்தியல் சார்ந்தவை அல்ல. இந்த வேறுபாடுகள் பெரிதாக இல்லை, சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், ஏழைகள், தலித், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் திரைமறைவில் அமைதியாக நசுக்கப்படுவதால் அவற்றை பார்த்துகொண்டு இருக்க முடியாது..
பிரதமர் பதவி மீது காங்கிரஸ் கட்சிக்கு ஆர்வமில்லை; இந்த சந்திப்பின் நோக்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காக அல்ல.
அரசியலமைப்பு, ஜனநாயகம், சமூகநீதியை காப்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என பேசினார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய மக்கள் முன்னணி (Indian people's front) என பெயரிடலாம் என எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாக விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் டுவீட் செய்து உள்ளார்.