ராகுல்காந்தி யாத்திரை மீது தாக்குதல்: பா.ஜனதா அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் - மல்லிகார்ஜுன கார்கே
|இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையால் ஊழல் முதல்-மந்திரி ஹிமந்தா பீதியடைந்துள்ளார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கூறினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது. லகிம்பூரில் சென்றபோது யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், 'பா.ஜனதா குண்டர்களால் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பேனர் கிழிப்பு போன்ற வெட்கக்கேடான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜனதா முயற்சிக்கிறது. மக்களின் குரலை நசுக்கி. அதன் மூலம் ஜனநாயகத்தை சிதைக்கிறது' என சாடியிருந்தார்.
அசாம் பா.ஜனதா அரசின் இத்தகைய மிரட்டல் மற்றும் தாக்குதல் தந்திரத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது என்றும் கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதைப்போல தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு இருந்தார். அதில், 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையால் மிகப்பெரிய ஊழல் முதல்-மந்திரி ஹிமந்தா எப்படி பீதியடைந்திருக்கிறார்? என்பதற்கு இதைவிட வேறு ஆதாரங்கள் வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.