100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி குறைப்பு என புகார்: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பா.ஜனதா கண்டனம்
|100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி குறைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டிற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கிராமப்புற மக்கள் 100 நாள் வேலை திட்டத்தின் பணிக்காக வீடு வீடாக அலைய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், இந்த திட்டத்துக்கான நிதியை பிரதமர் மோடி கணிசமாக குறைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியிருந்தார்.
இதை மறுத்துள்ள பா.ஜனதா, இது தொடர்பாக அவருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் தளத்தில், 'தரவுகளை மறைத்து பொய்களை மக்கள் முன் வைப்பதில் காங்கிரஸ் வல்லுனராக மாறியுள்ளது. 100 நாள் வேலை திட்டம் பற்றிய பொய்ப் பிரசாரங்களும் புலம்பல்களும் அதையே நிரூபணம் செய்கின்றன' என சாடியுள்ளார்.
100 நாள் திட்டத்தின் தேவைக்கு ஏற்ப மோடி அரசு தொடர்ந்து பட்ஜெட் மதிப்பீடுகளை மாற்றியமைத்துக்கொண்டே இருப்பதாக கூறியுள்ள அமித் மாளவியா, பத்தாண்டுகளாக ஆட்சி செய்தும் காங்கிரசால் இதைப் புரிந்துகொள்ள முடியாதது வெட்கக்கேடானது' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.