பொய்யர்களின் தலைவர் பிரதமர் மோடி - காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்
|பிரதமர் மோடி பொய்யர்களின் தலைவர் என்று மல்லிகர்ஜூன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
காந்திநகர்,
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் டிடியபடா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார்.
அப்போது கார்கே பேசியதாவது;
காங்கிரஸ் 70 ஆண்டுகளின் என்ன செய்தது என்று மோடி, அமித்ஷா கேட்கின்றனர். 70 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்றால் நீங்கள் ஜனநாயகம் பெற்றிருக்கமாட்டீர்கள். உங்களை (பிரதமர் மோடி) நாங்கள் ஏழைகள் என்று கூறிக்கொள்கிறீர்கள். நானும் தான் ஏழை. ஏழ்மையிலும் ஏழ்மையை சேர்ந்தவன் நான். நான் தீண்டத்தகாதவர்கள் என்று கூறும் சமுதாயத்தை சேர்ந்தவன் நான். நீங்கள் கொடுக்கும் தேநீரை மக்கள் குடிப்பார்கள். ஆனால், எனது தேநீரை மக்கள் குடிக்கக்கூடமாட்டார்கள்.
நீங்கள் (பிரதமர் மோடி) எத்தனை முறை பொய் பேசுவீர்கள்? பொய்கள் மீண்டும் பொய்கள். அவர் (பிரதமர் மோடி) பொய்யர்களின் தலைவர். அதற்கெல்லாம் மேலே சென்று காங்கிரசார் நாட்டை கொள்ளையடித்துவிட்டர்கள் என்று கூறுகிறீர்கள்.நீங்கள் ஏழைகளிடமிருந்து நிலத்தை கொள்ளையடிப்பதுடன், ஆதிவாசிகளுக்கு நிலத்தை கொடுப்பதில்லை. நிலம், நீர், காட்டை யார் அழிக்கிறார்கள்?. நீங்களும் நீங்கள் துணையாக நிற்கும் பணக்காரர்களும் தான் எங்களை கொள்ளையடிக்கின்றீர்கள்' என்றார்.