பசவராஜ் பொம்மையை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாற்றம்
|கர்நாடக சட்டசபை தேர்தலில் சிக்காவி தொகுதியில் போட்டியிடும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி இதுவரை 216 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளுக்கு 5-வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை எதிர்த்து சிக்காவி தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முகமது யூசூப் சவனூருக்கு பதிலாக யாசீர் அகமதுகான் பதான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 3 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
பசவராஜ் பொம்மை வேட்பு மனு
இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்தார். அவருடன் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய பசவராஜ் பொம்மை ஆயிரகணக்கான பா.ஜனதா தொண்டர்களுடன் தாசில்தார் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார்.
நல்ல நாள் என்பதால் பசவராஜ் பொம்மை ஏற்கனவே கடந்த 15-ந்தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தராமையா-ஜெகதீஷ் ஷெட்டர்
அதேபோல் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் மந்திரி மகாதேவப்பா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக அவர் வருணா நகரில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களுடன் தேர்தல் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து உப்பள்ளி-தார்வார் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று மனு தாக்கல் செய்தார். இவர்கள் தவிர ஏராளமானவர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். மதியம் 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது. அதனால் இன்றைய தினம் அதிகம் பேர் மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.