< Back
தேசிய செய்திகள்
புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை கோரி காங்கிரஸ் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை கோரி காங்கிரஸ் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

தினத்தந்தி
|
12 March 2024 5:07 AM IST

புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பெண் பிரமுகர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இன்னொரு தேர்தல் கமிஷனராக இருந்த அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால், தற்போது தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மட்டுமே இருக்கிறார். 2 தேர்தல் கமிஷனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை நிரப்ப 2 புதிய தேர்தல் கமிஷனர்கள் 15-ந் தேதிக்குள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பெண் பிரமுகர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு, புதிய தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனூப் பரன்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஆனால், அந்த உத்தரவுக்கு முரணாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தேர்தல் கமிஷனர்கள் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், மத்திய மந்திரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு, தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த சட்டத்துக்கு எதிராக நான் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளேன். அதன்பேரில், சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 12-ந் தேதி நோட்டீஸ் பிறப்பித்தது.

அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே காலியாக உள்ள 2 தேர்தல் கமிஷனர் பணியிடங்களை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டப்படி நியமிக்க உள்ளனர். புதிய சட்டப்படி, 2 புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும்.

அனூப் பரன்வால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புப்படி, 2 தேர்தல் கமிஷனர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மனுதாரர் ஜெயா தாக்குர் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங், வக்கீல் வருண் தாக்குர் ஆகியோர் ஆஜராகி முறையிட்டனர். மனுவை விரைவில் பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கு தலைமை நீதிபதி, ''மின்னஞ்சல் அனுப்புங்கள். நாங்கள் பரிசீலிக்கிறோம்'' என்று கூறினார். எனவே, மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்