< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்:  காவல் அதிகாரி, பொதுமக்கள் காயம்; 144 தடை உத்தரவு
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்: காவல் அதிகாரி, பொதுமக்கள் காயம்; 144 தடை உத்தரவு

தினத்தந்தி
|
11 May 2023 9:31 PM IST

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் இடையேயான மோதலால் காவல் அதிகாரி மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தனர்.

மங்களூரு,

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டத்தில் நடந்து முடிந்து உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (13-ந்தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு மையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மூடுஷெட்டே என்ற பகுதியில் நேற்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் இடையே மோதல் உருவானது. இதில், சிலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த மோதலில், காவல் அதிகாரி ஒருவரும் காயம் அடைந்து உள்ளார். போலீஸ் வாகனம் ஒன்றும் தாக்குதலில் சேதமடைந்தது. இதுபற்றி போலீசார் 5 எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.

இதுபற்றி மங்களூரு காவல் நிலைய ஆணையாளர் குல்தீப் குமார் ஜெயின் இன்று கூறும்போது, மோதலை தொடர்ந்து, நகரில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் நாங்கள் 4 பேரை கைது செய்து உள்ளோம். அவர்கள் இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மோதலுடன் தொடர்புடையவர்களையும் நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம். போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் புனீத், நிஷாந்த் குமார், ராகேஷ் மற்றும் தினேஷ் குமார் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்