'காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்; வருமான வரித்துறை அதன் கடமையை செய்துள்ளது' - பசவராஜ் பொம்மை
|விதிகளை பின்பற்றாமல் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரு,
டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் தெரிவித்தார்.
மேலும் இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை என விமர்சித்த அவர், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது முற்றிலும் பொய் என்று குறிப்பிட்டார். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் தேர்தல் விளம்பரங்களை செய்வதற்கு கூட தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவித்த ராகுல் காந்தி, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், வங்கிக் கணக்குகளை முடக்கிய விவகாரத்தில் வருமான வரித்துறை அதன் கடமையை செய்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியை முறையாக கட்டவில்லை. அதனால் வருமான வரித்துறை அதன் கடமையை செய்துள்ளது. விதிகளை பின்பற்றாமல் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது" என்று தெரிவித்தார்.