மாநிலங்களுக்கு தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தது காங்கிரஸ்..!!
|நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை காங்கிரஸ் நியமனம் செய்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினர் ஆற்றும் பணிகள் தொடர்பாக தொடர்பு கொள்வதில் எந்த குளறுபடிகளும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பவ்யா நரசிம்ம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த இவர் சிறந்த கல்வியாளர் மற்றும் பொருளாதார நிபுணர். அமெரிக்காவில் பணிபுரிந்தார். கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியோடு ஈர்ப்பு கொண்டு, பின்னர் அதில் சேர்ந்து கர்நாடக மாநில பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளராக தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற மாநிலங்களுக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் அந்தந்த மாநிலங்களில் கட்சியின் அனைத்து பிரிவுகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறையுடன் இணக்கமாக இருந்து, தகவல் தொடர்பு தொடர்பான செயல்பாடுகளில் சுமுகமாக பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.