மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கோபத்தில் உள்ளனர் - பிரதமர் மோடி
|மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் பா.ஜ.க. சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற 'பரிவர்தன் மகாசங்கல்ப்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர். பெண்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் முயற்சிக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆயிரம் ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியைப் போல் வேறு யாரும் இவ்வளவு அநீதி இழைத்ததில்லை. கொரோனா தொற்று காலத்தில் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டேன். ஆனால் சத்தீஸ்கர் அரசு அதிலும் ஊழல் செய்தது. சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அனைத்து ஏழை மக்களுக்கும் தரமான வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே அமைச்சரவையின் முதல் முடிவாக இருக்கும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.