வீர சாவர்க்கரை சிறுமைப்படுத்தும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள்- உத்தவ் தாக்கரே கட்சி
|சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை காங்கிரஸ், பாஜனதா கட்சிகள் சிறுமைப்படுத்தி வருவதாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி குற்றம்சாட்டி உள்ளது.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் தனது இந்திய ஒற்றுமை பாத யாத்திரையின்போது செய்தியாளர்கள் சந்திப்பில், சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை கடுமையாக விமர்சித்தார். அவர் "சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், இதற்காக அவர்களிடம் இருந்து உதவித்தொகை பெற்றார். இது வரலாற்று உண்மை" என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்திக்கு இந்தியா மற்றும் அவரது கட்சி வரலாறு தெரியாது என்று சாடினார். மேலும் சாவர்க்கருக்கு எதிரான இத்தகைய அறிக்கைகளை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி ஆதரிக்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அணியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாரத ரத்னா விருது
சாவர்க்கர் விவகாரத்தை காங்கிரசும், பா.ஜனதாவும் சிறுமைப்படுத்தி வருகிறது. இந்துத்வா சித்தாந்தவாதியான சாவர்க்கர் நவீன இந்திய வரலாற்றில் பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்ட நபராக உள்ளார்.
காங்கிரஸ், பா.ஜனதா இரு கட்சிகளும் முதலில் சாவர்க்கரின் அரசியல், சமூக, அறிவியில் மற்றும் பொருளாதார சிந்தனைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
மத்தியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் பா.ஜனதா சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்போதெல்லாம் பா.ஜனதா தனது முகத்தை மறைத்து கொள்கிறது.
அதிர்ச்சி அளிக்கிறது
பா.ஜனதாவை பொறுத்தவரை சாவர்க்கரின் பிரச்சினை வெற்று வதந்திக்காக மட்டும் தான். சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தியின் கருத்து புதிதாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அதிர்ச்சி அளிக்கிறது.
பல கருணை மனுக்களை அளித்து தான் சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து வெளியே வந்ததாக பல ஆண்டுகளாக காங்கிரஸ் கூறி வருகிறது. சுதந்திர போராட்டத்தில் புரட்சியாளர்கள் பங்கு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு தனியான சிந்தனை இருக்கலாம். ஆனால் சாவர்க்கர் போன்ற பல புரட்சியாளர்களின் கிளர்ச்சி ஆங்கிலேயர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.