காங்கிரஸ் வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை - பிரதமர் மோடி கடும் தாக்கு
|காங்கிரஸ் வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
மும்பை,
அரியானா, ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. அதேவேளை, அரியானாவில் பாஜக வெற்றிபெற்று அம்மாநிலத்தில் 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் 7 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடி பேசியதாவது,
திட்டங்களின் விரைவான வளர்ச்சியை மராட்டியம் இதற்குமுன் பார்த்ததில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் விரைவாக வளர்ச்சிபெற்றது.
ஏழை, விவசாயிகள், இளைஞர்கள், பெண்களின் வளர்ச்சியே எங்கள் இலக்கு. காங்கிரஸ் பொறுப்பற்ற கட்சி. அது வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை. இஸ்லாமிய மதத்தினர் இடையே பதற்றத்தை உருவாக்கி அதை காங்கிரஸ் வாக்கு வங்கியாக மாற்றுகிறது. இந்து மத்தினர் மற்றும் மற்றொரு மதத்தினர் இடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.
வளர்ச்சி மற்றும் மரபுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இந்த இரண்டிற்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்' என்றார்.