தேச விரோத சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டணி; பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
|காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்து, தேர்தலுக்கு அவர்களின் உதவியை பெறுகிறது என கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகாவின் முத்பித்ரி நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்து உள்ளது. தேர்தலுக்கு தேச விரோத சக்திகளின் உதவியை பெறுகிறது.
தேச விரோத சக்திகள் மீது உள்ள வழக்குகளை திரும்ப பெறுகிறது. பயங்கரவாத ஆதரவாளர்களை அவர்கள் பாதுகாக்கின்றனர் என பேசியுள்ளார். கர்நாடகாவில் பயங்கரவாத செயல்களை பரப்ப சதி திட்டம் தீட்டி, கைது செய்யப்பட்ட நபர்களை மீட்க காங்கிரஸ் முன்வருகிறது.
இந்த ரிவர்ஸ் கியர் கட்சியானது, தேச விரோத சக்திகள் மீது உள்ள வழக்குகளை திரும்ப பெறுவது மட்டுமின்றி அவர்களை விடுவிக்கவும் செய்கிறது. ஒட்டு மொத்த நாடும் நம்முடைய வீரர்களை மதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி நமது வீரர்களை புண்படுத்துகிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் மதிப்பளித்து வருகிறது.
ஆனால், ரிவர்ஸ் கியர் கட்சியானது உலகம் முழுவதும் சுற்றி கொண்டு, அந்நிய மண்ணில் நமது நாட்டை பற்றி அவதூறு செய்து வருகிறது என பேசியுள்ளார். ராஜஸ்தானில் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய குற்றவாளியை அக்கட்சி பாதுகாத்தது.
அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர். அதனால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு வர நீங்கள் விடுவீர்களா? உங்களது மாநிலம் அழிந்து போக அவர்களை நீங்கள் விடுவீர்களா? என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.