< Back
தேசிய செய்திகள்
புதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் புகார்
தேசிய செய்திகள்

புதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் புகார்

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

கர்நாடகத்தில் புதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறி எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி நடப்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் மந்திரிகள் மீது பரபரப்பு புகார்களை கூறியுள்ளனர். மந்திரிகள் தங்களின் பரிந்துரைகளை ஏற்பது இல்லை என்றும், அதிகாரிகளின் பேச்சை தான் அவர்கள் கேட்பதாகவும் கூறி இருக்கிறார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் சார்பில் மூத்த எம்.எல்.ஏ. பி.ஆர்.பட்டீல் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிருப்தி எம்.ல்.ஏ.க்கள் 10-க்கும் மேற்பட்டோர் கையெழுத்து போட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த கடிதத்தின் நகல்கள் சமூக வலைதளங்கள், கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் நேற்று வெளியானது. இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மக்களின் ஆதரவு, அன்பு, நம்பிக்கையால் நாங்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகியுள்ளோம். ஆனால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எங்களால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. நாங்கள் 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளிடம் சென்று, தங்களின் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு கேட்டோம். ஆனால் அதற்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை.

இதனால் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியவில்லை. நிதி ஒதுக்க மூன்றாவது நபர் மூலம் பணம் கொடுக்குமாறு கேட்கிறார்கள். வளர்ச்சி பணிகளுக்கு நிதியை பெற மூன்றாவது நபரை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மேலும் மந்திரிகள் தங்களுக்கு தேவையான அதிகாரிகளை நியமனம் செய்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள்.

அதிகாரிகள் பணி இடமாற்றம் தொடர்பாக நாங்கள் கொடுக்கும் பரிந்துரை கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இதனால் எந்த அதிகாரியும் எங்களின் பணிகளை செய்து கொடுப்பது இல்லை. எங்களின் பேச்சுக்கு மரியாதை இல்லை. அதனால் தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. எங்களின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாமல் நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மந்திரிகள் மீது முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதம் அனுப்பியதாக வெளியான தகவலை துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான டி.கே.சிவக்குமார் மறுத்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மந்திரிகளின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்து ஆளுங்கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் வெறும் வதந்தி. அவற்றில் எந்த உண்மையும் இல்லை. கடிதம் எழுதியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதிகளுக்கு ரூ.100 கோடி முதல் ரூ.300 கோடி வரை நிதி ஒதுக்கீடு கேட்கிறார்கள். நடப்பு ஆண்டில் பொருளாதார ரீதியாக சிக்கல் உள்ளது.

அதனால் தான் பெரிய திட்டங்களை அமல்படுத்த நினைக்காதீர்கள், பொறுமையாக இருங்கள் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தங்களின் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் யாருக்கும் அதிருப்தி இல்லை. அரசு வழங்கிய காலக்கெடுவுக்குள் இடமாற்றல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அதிருப்தி ஏற்படவில்லை. நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துகிறோம். இதனால் மக்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆலோசிக்கவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நாளை (வியாழக்கிழமை) கூட்டியுள்ளோம்.

கிரகலட்சுமி திட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஒரு வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். அதுகுறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிருப்தி ஏற்பட்டதால் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டுவதாக சொல்வது தவறு.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) கூட்டப்பட்டுள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இந்த கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை கூறுவார்கள் என தெரிகிறது. இதனால் இந்த கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெறலாம் என தெரிகிறது.

மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்று 2 மாதங்கள் ஆகும் நிலையில், மந்திரிகளுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே புகார் கூறியதாக கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

மேலும் செய்திகள்