< Back
தேசிய செய்திகள்
ஆதிக் அகமது கொலை: புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சி - காங்கிரஸ் கண்டனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஆதிக் அகமது கொலை: புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்ப முயற்சி - காங்கிரஸ் கண்டனம்

தினத்தந்தி
|
17 April 2023 3:57 AM IST

ஆதிக் அகமது கொலை சம்பவம், புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு 40 வீரர்களை பலி கொண்ட தாக்குதல் நடந்தபோது அந்த மாநில கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீரர்கள் பயணம் செய்ய விமானம் கேட்டதாகவும், ஆனால் மத்திய அரசு மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார். சாலை வழியாக பயணம் செய்ததால்தான் இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எடுத்து மத்திய அரசை சாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் பிரபல தாதா அதிக் அகமது சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் மூலம் சத்யபால் மாலிக் கூறிய குற்றச்சாட்டை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மோடி எந்திரம் வெளிப்படுத்தல்களை விரைவாக அடக்குகிறது அல்லது மற்ற தலைப்புச் செய்திகள் மற்றும் விவாதங்களை உருவாக்குவதன் மூலம் அவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்புகிறது என கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இதைப்போல, தலைப்புச்செய்திகளை கையாளுவதன் மூலம் அரசுக்கு எதிரான கேள்விகளை புறந்தள்ளுவதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெராவும் கூறியுள்ளார். இது குறித்து அவர், 'கேள்விகள் மட்டுமே அதிகரிக்கின்றன. சீனாவுக்கு ஏன் நியாயவாதி அந்தஸ்து? அதானி மீது ஏன் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை இல்லை? அதானியின் போலி நிறுவனங்களில் ரூ.20 ஆயிரம் கோடிகள் எங்கிருந்து வந்தன? புல்வாமாவில் தாக்குதல் குற்றச்சாட்டுக்கு ஏன் பதில் இல்லை?' என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்