< Back
தேசிய செய்திகள்
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவ வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்:  நடிகர் ஷாருக் கான்
தேசிய செய்திகள்

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவ வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்: நடிகர் ஷாருக் கான்

தினத்தந்தி
|
10 Sept 2023 5:53 PM IST

நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் வெற்றியடைந்ததற்காக பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக் கான் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு ஆண்டின் ஜி-20 உச்சி மாநாட்டுக்கான தலைமையை இந்தியா ஏற்று நடத்தியது. இதன்படி, டெல்லியின் பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 2 நாட்களாக இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில், முதல் நாளில் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான தீர்மானம் நிறைவேறியது. வரலாற்று ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பின்னர், வந்திருந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் வழங்கப்பட்டது.

2-வது நாளான இன்று ஜி-20 தலைமைத்துவம் பிரேசிலிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த மாநாட்டின் சிறப்புகளை உலக தலைவர்கள் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில், சிறந்த பூமிக்காக ஜி-20 உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் நடைபெற்றன என பிரதமர் மோடி, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

இதனை டேக் செய்து, நடிகர் ஷாருக் கான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் வெற்றியடைந்ததற்காக மற்றும் உலக மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, நாடுகள் இடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு, இந்தியரின் மனதிலும் கவுரவம் மற்றும் பெருமைக்கான உணர்வை அது கொண்டு வந்துள்ளது. உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ், நாங்கள் தனித்து வளம்பெறுவது மட்டுமின்றி ஒன்றாகவும் இருப்போம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம்.. என ஷாருக் கான் பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்