< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம் - வேட்புமனு படிவங்களை பெற்றார் சசி தரூர்!
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம் - வேட்புமனு படிவங்களை பெற்றார் சசி தரூர்!

தினத்தந்தி
|
24 Sept 2022 4:40 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் ஆகியோர் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.இந்நிலையில், சசி தரூர் செப்டம்பர் 30ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக அவர் தரப்பில் இன்று காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஐந்து செட் படிவங்கள் பெறப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் இருந்து வேட்பு மனுவைப் பெறுவதற்காக சசி தரூர் தனது பிரதிநிதியை அனுப்பியுள்ளார். சசி தரூரின் நெருங்கிய உதவியாளர் ஆலிம் ஜாவேரி படிவங்களை பெற்றார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ஒரு வேட்பாளரை, மொத்தம் 10 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஆதரிக்க வேண்டும். அதன்பின்னரே அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும்.

இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. 9,000க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கமிட்டி (பிசிசி) பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர்.

கடைசியாக, கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அப்போது ஜிதேந்திர பிரசாத்தை வீழ்த்தி சோனியா காந்தி வெற்றி பெற்றார். அதற்கு முன்னதாக, 1997 இல் சீதாராம் கேசரி தன்னை எதிர்த்து களம் கண்ட சரத் பவார் மற்றும் ராஜேஷ் பைலட்டை தோற்கடித்தார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சோனியா காந்தி குடும்ப உறுப்பினர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்ற அறிவிப்பால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

மேலும் செய்திகள்