< Back
தேசிய செய்திகள்
திருநங்கையுடனான முக்கோண காதலில் மோதல்; ஒருவர் பலி
தேசிய செய்திகள்

திருநங்கையுடனான முக்கோண காதலில் மோதல்; ஒருவர் பலி

தினத்தந்தி
|
15 Oct 2022 11:06 PM IST

டெல்லியில் திருநங்கையுடனான முக்கோண காதலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகி உள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியின் பாகர்கஞ்ச் பகுதியில் பிளம்பராக பணியாற்றி வந்தவர் அனில். இவர், 22 வயது திருநங்கை ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் 2 ஆண்டுகளாக ஆரம் பாக் பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

திருநங்கையின் மீது கொண்ட அதீத அன்பால் அனில், ரூ.40 ஆயிரம் தொகைக்கு நகைகளை வாங்கி கொடுத்து உள்ளார். இந்நிலையில், பஞ்சாப்பின் லூதியானா பகுதியை சேர்ந்த குட்டு ஹல்வாய் என்பவருடன் கடந்த சில நாட்களாக திருநங்கை ஒன்றாக வாழ தொடங்கியுள்ளார்.

இதன்படி, பாகர்கஞ்ச் பகுதியில் முல்டானி தண்டா என்ற இடத்தில் அவர்கள் வசிக்க தொடங்கினர். திருநங்கை திரும்பி வராத சூழலில், அவருக்கு நகை வாங்கி கொடுத்த வகையில், ரூ.40 ஆயிரம் தொகையை திருப்பி தரும்படி அனில் கேட்டுள்ளார். ஆனால், இதற்கு திருநங்கை மறுத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த அனில், திருநங்கை மற்றும் அவரது காதலரான குட்டு வசிக்கும் பகுதிக்கு நேற்று சென்றுள்ளார். அவர்களிடம் தனது பணம் பற்றி கேட்டு மோதலில் ஈடுபட்டு உள்ளார்.

இந்த வாக்குவாதத்தில், திடீரென அனில் கத்தியை எடுத்து தாக்க தொடங்கியுள்ளார். இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் அனில் அந்த பகுதியில் இருந்து தப்பிவிட்டார்.

இந்த சம்பவத்தில் குட்டு உயிரிழந்து விட்டார். திருநங்கை மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், நேற்றிரவு அனிலை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்