மங்களூருவில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி
|மங்களூருவில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலியானார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பகுதியில் வசித்து வந்தவர் ஈரய்யா. இவர் மங்களூருவில் இருந்து ஆக்னஸ் பகுதிக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் அவர் வழக்கம்போல் பணியில் இருந்தார். அவர் பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த பஸ் மங்களூரு கே.பி.டி. பகுதியில் இருந்து ஆக்னஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் நந்தூரி சர்க்கிள் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் ஈரய்யா நிலைதடுமாறி ஓடும் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் ஈரய்யாவை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஈரய்யா பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பான காட்சிகள் பஸ்சுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு காரின் முன்பகுதியில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.