< Back
தேசிய செய்திகள்
சமோசாவிற்குள் ஆணுறை, குட்கா கிடந்ததால் அதிர்ச்சி: 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
தேசிய செய்திகள்

சமோசாவிற்குள் ஆணுறை, குட்கா கிடந்ததால் அதிர்ச்சி: 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
9 April 2024 5:25 PM IST

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் பிம்பாரி சின்ச்வாட்டில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு ஆர்டர் மூலமாக வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் சிறு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நிறுவனத்துக்கான உணவுகளை ஆர்டர் எடுப்பதில் உணவக நிறுவனங்கள் இடையிலான போட்டி மற்றும் பொறாமை காரணமாக இந்த அவலம் நேர்ந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக், பிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,

ஆட்டோமொபைல் நிறுவனத்துக்கு உணவு வழங்க ஒப்பந்தத்தில் தேர்வான உணவு நிறுவனத்துக்கு எதிராக, மற்றொரு உணவு நிறுவனம் இந்த செயலை செய்துள்ளது. இதற்காக தனது ஊழியர்களில் சிலரை போட்டி உணவு நிறுவனத்துக்கு ஒப்பந்த ஊழியராக அனுப்பி வைத்தது. அந்த நபர்கள், நிறுவனத்துக்காக தயாரான சமோசாக்களில் ஆணுறை, குட்கா மற்றும் சிறு கற்களை கலந்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில், 3 நபர்கள் போட்டி நிறுவன பணியாளர்களின் மத்தியில் ஊடுருவி கலப்படத்தில் ஈடுபட்டதும், இதர 2 பேர் அதற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்துள்ளது. மனோகர் என்டர்பிரைசஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில் எஸ்.ஆர்.ஏ. என்டர்பிரைசஸ் என்ற போட்டி நிறுவனம் திட்டமிட்டதும், அதற்காக தனது ஊழியர்களை வேறு பெயர்களில் அனுப்பி ஆணுறை, குட்கா உள்ளிட்டவற்றை சமோசாக்களில் கலந்ததும் வெளிப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்