< Back
தேசிய செய்திகள்
துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி, முலாயம்சிங் யாதவ் மறைவுக்கு; கர்நாடக சட்டசபையில் இரங்கல்
தேசிய செய்திகள்

துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி, முலாயம்சிங் யாதவ் மறைவுக்கு; கர்நாடக சட்டசபையில் இரங்கல்

தினத்தந்தி
|
20 Dec 2022 12:15 AM IST

கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி, முலாயம்சிங் யாதவ் உள்பட முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பெலகாவி:

கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி, முலாயம்சிங் யாதவ் உள்பட முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானம்

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபாநாயகர் காகேரி இரங்கல் தீர்மானம் தாக்கல் செய்தார். அதாவது துணை சபாநயகர் ஆனந்த் மாமணி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் அப்துல் சித்திக், முன்னாள் எம்.பி.கோலூர் பசவனகவுடா மற்றும் சட்டசபை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த சபையின் துணை சபாநாயகராக இருந்த ஆனந்த் மாமணியுடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அவர் முன்மாதிரி உறுப்பினராக இருந்தார். கல்வி, நீர்ப்பாசனத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார். அவர் தனது தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றினார். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ், மத்தியில் ராணுவத்துறை மந்திரியாகவும் பணியாற்றினார்.

நாட்டுக்கு சேவையாற்றினார்

அவர் நாட்டுக்கு சேவையாற்றினார். அவர் கர்நாடகத்தில் சமாஜ்வாடி கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவை கட்சியில் சேர்த்து கொண்டார். அவர் சிவமொக்காவில் போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்றார். மரணம் அடைந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது:-

இந்த சபையின் துணை சபாநாயகராக இருந்த ஆனந்த் மாமணி மரணம் அடைந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்தது. நான் அவரிடம் பல முறை பேசியுள்ளேன். அப்போது எல்லாம். உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரமாக நம்மை விட்டு செல்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

சபை ஒத்திவைப்பு

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ், மூத்த தலைவராக இருந்தார். 10 முறை எம்.எல்.ஏ.வாகவும், 7 முறை எம்.பி.யாகவும் பணியாற்றினார். அவரது மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரங்கல் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதைத்தொடர்ந்து ஜனதா தளம் (எஸ்) துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர் உள்பட உறுப்பினர்கள் பலர் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசினர். இரங்கல் தீர்மானத்தை தொடர்ந்து மரணம் அடைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தில் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்